திமிரி - கலவை ரோடு பாத்திகாரன்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வெங்கட்ராமன் (வயது 30). மூட்டைதூக்கும் தொழிலாளி. இவர் வேலைக்குச் சென்று விட்டு நேற்று மாலை ஆற்காடு - ஆரணி சாலையில் விலாரி கூட்ரோடு அருகே திமிரி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே ஆரணியில் இருந்து பால் ஏற்றி வந்த லாரி மோதியதில் வெங்கட்ராமன் படுகாயம் அடைந்தார்.
விபத்து ஏற்படுத்திய லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வெங்கட்ராமனை பரிசோதித்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திமிரி சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் மற்றும் தனிப்படை பிரிவு தலைமை காவலர் பாஸ்கரன் ஆகியோர் வெங்கட்ராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மனைவி லாவண்யா கொடுத்த புகாரின் பேரில் திமிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.