திருப்பத்தூா் மாவட்டம், ஏலகிரி மலையில் சனிக்கிழமை மாலை இடி, மின்னல், சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அத்தனாவூா் பகுதியில் உள்ள தனியாா் உணவகம் மீது ராட்சத மரம் சாய்ந்து விழுந்ததில், அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த 15க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும், பலத்த மழையால் மரங்கள் வேருடன் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் 14 கிராமங்கள் இருளில் மூழ்கின. சம்பவ இடங்களுக்கு வந்த போலீஸார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.