வேலூர் சத்துவாச்சாரி நேருநகரை சேர்ந்தவர் மகேஷ் (வயது 38), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி பார்வதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். விடுமுறை என்பதால் 2 மகன் களும் நேற்று காலை கிரிக்கெட் விளையாட சென்றனர். மகேஷ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மதியம் 12 மணியளவில் மகன்கள் வீட்டிற்கு வந்தனர். அப்போது அறையில் உள்ள மின்விசிறியில் மகேஷ் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்தார். அதனால் அதிர்ச்சி அடைந்த மகன்கள் அருகில் வசிக்கும் உறவினர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சத்து வாச்சாரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது அசாருதீன் மற்றும் போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், மகேஷ் மனைவி பார்வதி கடந்த ஜனவரி மாதம் கடன் தொல்லையால் லத்தேரி அருகே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அதனால் மிகுந்த மனவேதனையுடன் மகேஷ் காணப்பட்டார். மனைவி இறந்த துக்கம் தாளாமல் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.