வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், மகளிர் குழுக்களுக்கு வங்கி கடன் உதவியும், சிறப்பாக செயல்பட்ட வங்கிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயமும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணா ஐய்யப்பதுரை, பீஞ்சமந்தை மலை கிராமத்தில் கூட்டுறவு சங்கம் கட்ட அடிக்கல் நாட்டு விழா இந்த விழாவிலேயே நடைபெறும் என தவறான தகவல் தெரிவித்ததாகக் குற்றம் சாட்டினார். அந்த கிராமத்தில் இன்னும் இடம் தேர்வு செய்யப்படாத நிலையில், அடிக்கல் நாட்டு விழா எப்படி நடத்த முடியும் என அவர் கேள்வி எழுப்பினார். பல போராட்டங்களுக்குப் பிறகு அந்தப் பகுதியில் கூட்டுறவு கடைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும், திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு கடையை பிரித்து எடுத்து வந்துள்ள நிலையில் இடம் தேர்வு செய்யப்படாமல் அடிக்கல் நாட்ட முடியாது என்றும் அவர் கூறினார்.