புதுச்சேரியில் இருந்து தனியார் சொகுசுப் பேருந்து 23 பயணிகளுடன் பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. பேருந்தை தருமபுரியைச் சேர்ந்த குமரேசன் ஓட்டிச் சென்றார். செஞ்சியை அடுத்த செம்மேடு பேருந்து நிறுத்தம் அருகே இந்தப் பேருந்து சென்றபோது, குறுக்கே சென்ற கார் மீது மோதமலிருக்க ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்ததால் பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
முன்னதாக, பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததைப் பார்த்த எதிரே பைக்கில் வந்த கீழ்பாப்பாம்பாடி பகுதியைச் சேர்ந்த தியாகு, பைக்கை போட்டுவிட்டு தப்பியோடினார். பேருந்து அந்த பைக் மீது கவிழ்ந்ததில் பைக் சேதமானது. அந்தப் பகுதியிலிருந்த பொதுமக்கள் விரைந்து சென்று பேருந்தின் பின்பக்க கதவை திறந்து பயணிகளை மீட்டனர்.
பேருந்தில் பயணம் செய்த 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் 108 அவசர ஊர்தி மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் 5 பேர் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தகவலறிந்து வந்த நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீசார் விபத்து குறித்து நேரில் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தனர். மேலும், செஞ்சியில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் நிகழ்விடத்துக்கு வந்து பேருந்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். விபத்தால் அந்தப் பகுதியில் சிறுது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.