விக்கிரவாண்டி: சிறுமி உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி தந்தை மனு

73பார்த்தது
விக்கிரவாண்டி: சிறுமி உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி தந்தை மனு
விக்கிரவாண்டியைச் சேர்ந்த பழனிவேல் மகள் லியாலட்சுமி(4). இவர், அங்குள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார். கடந்த 3-ஆம் தேதி மதியம் உணவு இடைவேளையின்போது சக மாணவ, மாணவிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த லியாலட்சுமி, பள்ளியின் கழிவுநீர்த் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார். 

இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து பள்ளித் தாளாளர் எமல்டா, முதல்வர் டோமினிக் மேரி, ஆசிரியை ஏஞ்சல் ஆகிய மூவரையும் கைது செய்தனர். உடல்நலக் குறைவால் தாளாளர், முதல்வர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆசிரியை மட்டும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த லியாலட்சுமியின் தந்தை பழனிவேல் அளித்த மனுவில் கூறியிருப்பது: எனது மகள் லியாலட்சுமியின் உயிரிழப்பு சம்பவத்தில் பள்ளி ஊழியர்கள் அனைவரும் நிர்வாகத்துக்கு உடந்தையாக இருந்து நாடகமாடி, உண்மையை மறைத்துள்ளனர். பள்ளி வளாகத்திலுள்ள கண்காணிப்பு கேமரா விடியோ பதிவுகளை முழுமையாக வழங்க வேண்டும். விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டு, உண்மையைக் கண்டறிய வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அழிக்க முற்படுகின்றனர் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.