கிளியனுார் அடுத்த பேராவூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆண்டாள், 60; இவர் கடந்த 21ம் தேதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர், ஆண்டாளிடம் தமிழக அரசு வழங்கும் இஸ்திரி பெட்டிக்கு நீங்கள் விண்ணப்பித்துள்ளீர்கள் என்றும், உங்களுக்கு இஸ்திரி பெட்டி வந்துள்ளது எனவும், என்னுடன் வந்தால் வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய ஆண்டாள், அவருடன் பைக்கில் ஏறிச் சென்றார்.
தென்கோடிப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவில் அருகில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்ற அந்த நபர் ஆண்டாள் அணிந்திருந்த நகை மற்றும் பணம் கொடுத்தால், உடனடியாகச் சென்று இஸ்திரி பெட்டி வாங்கி வருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய ஆண்டாள், தான் அணிந்திருந்த நான்கு கிராம் கம்மல், இரண்டு கிராம் மூக்குத்தி மற்றும் ரூ. 2 ஆயிரம் ரொக்கப்பணத்தை கொடுத்துள்ளார். அதை வாங்கிக்கொண்டு அந்த நபர் பைக்கில் மாயமாகி விட்டார். வெகு நேரமாக அந்த மர்ம நபர் வராததால், தன்னை ஏமாற்றியது தெரிய வந்தது. இது குறித்து ஆண்டாள் புகாரின் பேரில் கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.