புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா வாகனங்கள் தமிழகத்தில் தேவையான அனுமதியின்றி விழுப்புரம் பகுதியில் இயக்கப்படுவதாகக் கூறி, சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் உள்ளூர் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். புதுச்சேரியில் தமிழக வாகனங்களுக்கு பயணிகளை ஏற்ற அனுமதி மறுக்கப்படுவதாகவும், இது சமநிலையற்ற நிலை என்றும் தெரிவித்தனர். பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.