விழுப்புரம் தனியார் திருமணமண்டபத்தில் நியாயவிலைக் கடை பணியாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஜெயச்சந்திரராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 10 முதல் மாவட்ட தலைநகரங்களில் 3 நாட்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. காலியாக உள்ள 2,000 பணியிடங்களால் பணியாளர்கள் கூடுதல் சுமை தாங்குவதாகவும், பெண் மற்றும் மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு கழிப்பிட வசதி இல்லை என்றும் விமர்சிக்கப்பட்டது. முதியோரின் கைரேகை பிரச்சனைக்கு OTP அல்லது புராக்ஸி முறை, லாரி வாடகை குளறுபடிகளைத் தீர்க்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. பிப்ரவரி 20க்குள் ஊதிய உயர்வு மற்றும் கோரிக்கைகளுக்கு அறிவிப்பு வெளியிடப்படாவிட்டால் தீவிரப் போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டது. அரசு உடனடி பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தப்பட்டது.