விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ. செங்குட்டுவன், விக்கிரவாண்டியில் இறந்து கிடந்த சிறுத்தை இப்பகுதிக்கு உரியதாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார். 1878ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆவணத்தின்படி, அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தில் புலி, சிங்கம், சிறுத்தை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், 1962ஆம் ஆண்டு கெசட்டரில் விழுப்புரம் அருகே உள்ள ரிசர்வ் பாரஸ்ட்களில் வனவிலங்குகள் எதுவும் இருப்பதாகத் தெரிவிக்கப்படவில்லை. இதனால், அப்போதே வனவிலங்குகள் நடமாட்டம் இல்லை என்பது தெளிவாகிறது. எனவே, விக்கிரவாண்டியில் கண்டெடுக்கப்பட்ட சிறுத்தை இப்பகுதிக்கு உரியதாக இருக்க வாய்ப்பில்லை என்றும், இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.