விழுப்புரம் அருகே பாணாம்பட்டு ரயில்வே கேட்டில் தண்டவாளப் பாதையில் கற்கள் உடைந்து இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவதைத் தடுக்க, ரயில்வே துறை ஊழியர்கள் இன்று பாணாம்பட்டு ரயில்வே கேட்டை மூடி சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டனர். முன்னறிவிப்பின்றி திடீரென ரயில்வே கேட் மூடப்பட்டதால், விழுப்புரம், பானாம்பட்டு, ஆனாங்கூர், பில்லூர் போன்ற கிராமங்களுக்குச் செல்பவர்கள் ஆறு கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ரயில்வே கேட் மூடப்பட்டதற்கான காரணம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியபோது, ரயில்வே ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போக்குவரத்து காவல்துறையினர் தலையிட்டு நிலைமையைச் சமாளித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.