விழுப்புரம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விநாயகம், 73; விவசாயி. இவர், நேற்று மாலை 5:30 மணிக்கு புதுச்சேரியில் இருந்து வெள்ளரி விதை மூட்டையை மொபெட்டில் வைத்துக்கொண்டு நாகப்பட்டினம் புறவழிச்சாலையில் விழுப்புரம் நோக்கிச் சென்றார். விழுப்புரம் அருகே கொளத்தூர் அருகே சென்றபோது, புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த எர்டிகா கார் மொபெட் மீது மோதியது. இதில், நிலைத்தடுமாறிய கார் சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த விநாயகம் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும், காரை ஓட்டி வந்த விழுப்புரம் மேற்கு சண்முகாபுரம் சேர்மன் சுப்புராயர் தெருவைச் சேர்ந்த ராஜேஷ், 52; மற்றும் அவரது தந்தையான தி.மு.க. முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராஜரத்தினம், 80; ஆகியோர் படுகாயமடைந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு 7:30 மணிக்கு ராஜரத்தினம் இறந்தார். தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கிரேன் மூலம் காரை மீட்டு போக்குவரத்தைச் சரிசெய்தனர். விழுப்புரம் தாலுகா போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.