விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் நகரப் பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகளை மருதூர் ஏரிக்கரையில் கொட்டுவதால், அப்பகுதி குடிநீர் ஆதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து நகராட்சி தற்காலிகமாக நிறுத்தியிருந்தது. ஆனால் தற்போது மீண்டும் நகராட்சி வாகனங்கள் மூலம் அதே ஏரிக்கரையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஒரு சமூக ஆர்வலர் குப்பை கொட்டும் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாக பரவி, நகராட்சியின் நடவடிக்கையைப் பற்றிய கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மருதூர் ஏரி அருகே குப்பை கொட்டுவது தொடர்ந்தால் நிலத்தடி நீரும், ஏரி நீரும் மாசாகி மக்கள் ஆரோக்கியத்துக்கு ஆபத்தாக மாறும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.