பெண்ணை கத்தியால் குத்தி தங்க நகைகளை பறித்த ஆட்டோ ஓட்டுநர்

50பார்த்தது
விருதுநகர் யானைக்குழாய் தெருவை சேர்ந்தவர் முருகேசன் என்பவர் மனைவி சங்கர் சித்ராதேவி(43). இவர் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் உணவகத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவ தினத்தன்று ஆட்டோ ஓட்டுநர் தங்கபாண்டி, சங்கர் சித்ராதேவியிடம் அக்கா நான் அருப்புக்கோட்டைக்கு சவாரி ஏற்ற செல்வதாகவும் நீங்கள் ஆட்டோவில் ஏறி கொள்ளுங்கள் நான் அருப்புக்கோட்டையில் சென்று இறக்கி விடுகிறேன் எனவும் கூறியுள்ளார்.

ஆட்டோ ஓட்டுநரின் பேச்சை நம்பி சங்கர் சித்ராதேவி அவரது ஆட்டோவில் ஏறி சென்றுள்ளார். அப்போது செல்லும் வழியில் மற்றொரு நபர் ஆட்டோவில் ஏறி உள்ளார். ஆட்டோ பாலவநத்தம் தாண்டி சென்று கொண்டிருந்தபோது ஆட்டோ ஓட்டுநர் தங்கபாண்டி, அவரது கூட்டாளி ராமநாதன் இருவரும் சேர்ந்து சங்கர் சித்ரா தேவியை தாக்கி கத்தியால் குத்தி அவர் கழுத்து மற்றும் காதில் அணிந்திருந்த 4 1/2 சவரன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு ஆட்டோவில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடினர்.

ரத்த காயத்துடன் சாலையில் கிடந்த சங்கர் சித்ரா தேவியை விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அருப்புக்கோட்டை ஏ. எஸ். பி மதிவாணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தாலுகா காவல் நிலைய போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது இருக்கன்குடி சாலையில் பதுங்கியிருந்த ஆட்டோ ஓட்டுநர் தங்கப்பாண்டியை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி