விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தவம் பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் சங்கர பாண்டியன் மற்றும் பேச்சிமுத்து ஆகியோரை கொலை செய்துவிட்டு கொள்ளையடித்த வழக்கில் தேவதானம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் (25) என்பவரை நவம்பர் 12 அன்று காலை சேத்தூர் அருகே அஞ்சநேயர் கோவில் அருகே போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். கொள்ளையடித்த பொருட்களை பதுக்கி வைத்திருந்த இடத்தை நாகராஜ் கூறியதன்படி போலீசார் சென்றபோது, அவர் அரிவாளால் சார்பு ஆய்வாளர் கோட்டைச்சாமியை தாக்கி தப்பிக்க முயன்றார். அப்போது ஆய்வாளர் ரமேஷ் கண்ணா துப்பாக்கியால் சுட்டு நாகராஜை பிடித்தார். இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முக்கிய குற்றவாளி முனியாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.