விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா இன்று (நவ. 4) நேரில் சென்று ஆய்வு செய்தார். அரசின் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் பார்வையிட்டு, சிகிச்சை முறைகள், மருந்து இருப்பு, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். கொங்கன்குளம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமையும் ஆய்வு செய்து, மனுக்கள் பதிவேற்றம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்புப் பிரிவுகள் போன்றவற்றை பார்வையிட்டார். பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, உடனடி தீர்வு வழங்க அரசு அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் 2026-ன் கீழ் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்வதையும் ஆய்வு செய்தார்.