விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி வருபவர் ராஜேஷ்வரி (35). இவரது வீடு கொங்கலாபுரத்தில் உள்ளது. சம்பவத்தன்று ராஜேஷ்வரி வீட்டின் அருகில் உள்ள கோவிலுக்குச் சென்ற போது வீட்டின் கதவை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் வீட்டிற்குத் திரும்பிய போது முன்கதவு திறக்காத நிலையில் வீட்டின் உள்ளே வாலிபர் ஒருவர் திருட முயற்சி செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து ஏட்டு ராஜேஷ்வரி அந்த வாலிபரைப் பிடித்து சிவகாசி டவுன் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்திய போது அவர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள திருமலாபுரத்தைச் சேர்ந்த ராஜ் மகன் நந்தகுமார் (23) என தெரியவந்தது. அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.