விருதுநகர் மாவட்டம் எம். ரெட்டியபட்டி பகுதியில் உள்ள திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, கிராமப்புற மக்களின் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்க முயல்வதாகக் கூறி, அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சுழி தெற்கு, வடக்கு, மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர்கள் முத்துராமலிங்கம், முனியாண்டி, கருப்பசாமி ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 125 நாள் தேசிய வேலை உறுதித் திட்டத்தை இருட்டடிப்பு செய்ய முயலும் திமுக அரசையும், முதல்வர் மு. க. ஸ்டாலினையும் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பெண்கள் உள்ளிட்டோர் ஊர்வலமாகச் சென்று ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.