விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே தும்முசின்னம்பட்டி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுமார் 950 அட்டைதாரர்கள் உள்ள நிலையில், 530 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். ஜேசிபி இயந்திரம் மூலம் பணிகள் நடைபெறுவதாகவும், மனித உழைப்பு பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பணித்தள பொறுப்பாளர்கள் பாண்டியம்மாள், கற்பக பாண்டீஸ்வரி, மேற்பார்வையாளர் கணேசன் மற்றும் திமுக கிளைச் செயலாளர் மோகன் ஆகியோர் இணைந்து பணியாளர்களிடம் தலா 300 ரூபாய் பெற்றுள்ளதாகவும், மேலும் 200 ரூபாய் செலுத்த மறுத்தால் பணி வழங்க மறுப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து எம் ரெட்டியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.