விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருப்பசாமி என்பவர் அளித்த புகார் மனுவில், மாவட்டம் முழுவதும் செயல்படும் கல்குவாரிகளில் உரிமம் பெற்றவர்களே நடத்துகிறார்களா அல்லது சட்டவிரோதமாக உள்குத்தகைக்கு விடப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்றும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கனிமங்கள் அகழப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 2025–26ஆம் ஆண்டிற்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 82 குவாரிகளில் இதுவரை 59 குவாரிகளில் டிரோன் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள குவாரிகளிலும் விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. டிரோன் அளவீட்டு அறிக்கைகள் முழுமையாக கிடைத்த பின், விதிமுறைகள் மீறப்பட்டதாக உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட குவாரி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என புவியியல் மற்றும் சுரங்கத்துறை எச்சரித்துள்ளது.