விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ஆனையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் இருவேறு மாணவிகளை அதே பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றும் ராஜாமணி, விருதுநகரில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்கு காரில் அழைத்துச் சென்றுள்ளார். இரு மாணவிகளும் வெவ்வேறு பள்ளிகளில் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் இருவரையும் இருவேறு பள்ளிகளுக்கு ஆசிரியர் அழைத்துச் சென்றுள்ளார். போட்டி முடிந்து முதலாவதாக 12ம் வகுப்பு மாணவியை காரில் அழைத்து வந்தபோது மாணவி போட்டியில் தோல்வியடைந்ததாக ஆசிரியர் ராஜாமணியுடன் கூறியுள்ளார்,
அப்போது மாணவிக்கு ஆறுதல் கூறுவது போல் நடித்து மாணவியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். ஆசிரியரின் செயல்பாடு கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அது குறித்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இதனிடையே மற்றொரு மாணவியான 10ம் வகுப்பு மாணவி கலைத்திருவிழாவில் வெற்றி பெற்று ஈரோட்டில் நடைபெற இருந்த மாநில அளவிலான கலைத்திருவிழாவிற்குச் செல்ல இருப்பதும், அவரை கணித ஆசிரியர் ராஜாமணி காரில் அழைத்துச் செல்வதையும் அறிந்த பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு நடந்த பாலியல் தொந்தரவு குறித்து தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தலைமை ஆசிரியர் அளித்த புகாரின்பேரில் விருதுநகர் மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட கணித ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.