*விருதுநகர் அருகே முறையாக குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்* விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாவாலி ஊராட்சியில் உள்ள காலணி தெருவில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் இருப்பதாகவும், தங்களுக்கு முறையான குடிநீர் வழங்க வேண்டும் எனக் கூறி, எரிச்சநத்தம் பாவாலி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அறிந்து அங்கு வந்த தாசில்தார் ராஜ்குமார் மற்றும் பஜார் காவல் நிலைய ஆய்வாளர் மாதவன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.