
இந்தியா-பிரிட்டன் ஒப்பந்தம்: வங்கதேச ஆர்டர்கள் இந்திய நிறுவனங்களுக்குத் திரும்பின!
திருப்பூர்: இந்தியா-பிரிட்டன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கடந்த 15ம் தேதி முதல் அமலுக்கு வந்ததன் மூலம், வங்கதேசத்துக்குச் செல்லவிருந்த ஆடை ஏற்றுமதி ஆர்டர்கள் இந்திய நிறுவனங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளன. இதனால் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அனைத்து ஜவுளி ஏற்றுமதி முகமைகள் கூட்டமைப்பு தலைவர் இளங்கோவன் கூறுகையில், "இந்தியா-பிரிட்டன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கடந்த 15ம் தேதி அமலுக்கு வந்தது. இதன் வாயிலாக, நம் நாட்டு ஜவுளி, ஆடை ஏற்றுமதிக்கு பூஜ்ஜிய சுங்க வரி சலுகை கிடைத்துள்ளது. தற்போதைய சலுகையின் காரணமாக, வங்கதேசத்துக்கு ஆர்டர் வழங்கி வந்த பிரிட்டன் வர்த்தகர்களும், வர்த்தக முகமைகளும் இந்திய நிறுவனங்களை அணுகத் தொடங்கியுள்ளன. வங்கதேசத்துக்குச் செல்ல இருந்த 4 கோடி டி-ஷர்ட் உற்பத்தி ஆர்டரை இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கும் முயற்சியும் நடந்து வருகிறது." என்று தெரிவித்தார். இந்த புதிய வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்த, நிறுவனங்கள் உற்பத்தித் திறனையும் கட்டமைப்பையும் மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



































